13 September 2005

ஒரு அரசியல் பிரவேசம்

கட்சியின் பெயர் அறிவிக்கப் படுவதற்கு முன்பே, வாக்காளர்கள் மத்தியில் 15% ஆதரவு; அரசியல் அனுபவம் சிறிதும் இல்லாவிட்டாலும், பெரிய அரசியல் கட்சிகளையும் மிஞ்சும் அளவிற்கு திட்டமிட்டு நடத்தப்படும் மாநாட்டு ஏற்பாடுகள்; தமிழகத்தின் ஒரு கிராமம் விடாமல் வைக்கப்பட்டுள்ள "கேப்டன் அழைக்கிறார்" விளம்பரங்கள்; சிவாஜியிலிருந்து, டி.ஆர் வரை தோற்றுப் போன அரசியல்வாதிகளைப் பார்த்த பின்னும், எம்.ஜி.ஆர், எம்.டி.ஆர் ஆகியோரை உதாரணம் காட்டும் தைரியம் - விஜயகாந்த் அரசியலிலும் ஹீரோவாகத் தான் தெரிகிறார்.

விஜயகாந்த் - தமிழ்நாட்டில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் பெயர். தமிழகமே செப்டம்பர் 14-ஐ ஆவலுடன் எதிர்பார்ப்பது போல் தோற்றம். மற்ற அரசியல் கட்சிகளெல்லாம், ஒதுக்கித் த்ள்ள முற்பட்டாலும், ஒரு வகையில் ஆடிப் போயிருப்பதென்னவோ உண்மை தான். அதிலும் விஜயகாந்தின் அறிவிப்புகளூம், பேட்டிகளும் தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

  • ஜாதி அரசியல் செய்ய மாட்டேன்
  • பெரியார், அண்ணா ஆகியோரைப் பின்பற்றினாலும் என்னுடையது திராவிடக் கட்சியாக இருக்காது
  • தமிழக மக்கள் எதிர்பார்க்கும் ஒரு ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை உருவாக்குவேன்
  • யாரையும் முறை சொல்லி விமர்சித்து அரசியல் (negative politics) நடத்த மாட்டேன்
  • நன்கொடை பெற்று அரசியல் நடத்த மாட்டேன்

நிஜமாகவே, ஒரு புதிய மாறுதல் தமிழகத்தில் வரப்போவதாகவே தெரிகிறது. அப்பாடா, இந்த இரு கழகங்களுக்கும் ஒரு மாற்று வந்தால் சரி.

சொத்தை விற்று, நன்கொடை வாங்காமல் தமிழகத்தின் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு, அதுவும் கட்சி ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாக - சாத்தியப்படுமா என்ன? ஆனால் விஜயகாந்தின் கடந்த காலத்தையும் சற்று கவனிக்க வேண்டும்.

  • தனக்கென ஒரு பின்புலம் (godfather) இல்லாமல் சாதாரண நடிகனாகத் தொடங்கி, ஹீரோவாக உயர்ந்து, தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு, இன்னும் நிலைத்திருப்பது
  • நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நடிகர் சங்கத்துக்கு உயிரூட்டி (அதுவும் 5 வருடத்திற்குள்), கடன்களை அடைத்து, வயதான கஷ்டப்படும் நடிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது
  • எந்தத் திரையுலகப் பிரச்சனையானாலும் (தங்கர் பச்சான் விவகாரம் உட்பட) தீர்ப்பதற்கு முன்முயற்சி எடுப்பது
  • அரசியலுக்கு வருவது என்ற விஷயத்தில் 'எப்போ வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல ...' என்று டயலாக் பேசாமல் களத்திலிறங்கிய துணிச்சல்
  • பா.ம.க.வின் அடாவடி அரசியலை எதிர்த்து நின்று, பதிலடி கொடுக்கும் ஸ்டைல்

நிர்வாகத் திறன், தலைமைப் பண்பு, தெளிவு, துணிச்சல் - இதைத் தவிர அரசியல்வாதிக்கு வேறு என்னப்பா வேண்டும்? விஜயகாந்தால் சாதிக்க முடியும் என்று தான் நினைக்கிறேன். ஆனால், இதில் குறைகளும், பிரச்சனைகளும் இல்லாமலில்லை.

  • முதலில், கட்சியின் கொள்கைகளை பற்றிய கேள்விக்கு - 'மக்கள் எல்லோரும் நல்லா இருக்கணும்' என்பது தான் பதிலாக வருகிறது
  • கட்சியில் இரண்டாவது, மூன்றாவது நிலை தலைவர்களோ, பேச்சாளர்களோ இல்லாதது
  • தன்னுடைய மனைவியை முன்னிறுத்துவது (இத்தனைக்கும் அவரது மனைவி இது வரை அரசியல் சம்பந்தமாக ஒரு கருத்தும் சொன்னதாகத் தெரியவில்லை)
  • தேசியப் பார்வையோ, தேசிய அளவிலான பிரச்சனைகளைப் பற்றிய எண்ணமோ இல்லாதிருப்பது

இவையெல்லாம் இருந்தாலும், விஜயகாந்த் சிலரிடையேயாவது, ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதென்னவோ உண்மை தான். அந்த நம்பிக்கை காப்பாற்றப்படுமா என்பது செப்டம்பர் 14-க்குப் பிறகு தெரிந்து விடும்.

இப்போதைக்கு, விஜயகாந்துக்குச் சொல்வதெல்லாம், "வாழ்த்துக்கள்!"