15 July 2005

சுதீந்திர குல்கர்னியின் கட்டுரை

இந்தக் கட்டுரை திரு. சுதீந்திர குல்கர்னி அவர்களால் மார்ச் மாதம் 23-24 தேதிகளில் போபாலில் நடந்த 'சிந்தனையாளர்கள் மாநாட்டில்' சமர்ப்பிக்கப்பட்டது. குல்கர்னி, பா.ஜ.க வின் தேசிய செயலாளராகவும், கட்சித் தலைவர் அத்வானியின் செயலாளராகவும் பணியாற்றுகிறார். இக்கட்டுரை முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் (22 ஜூன்) பதிப்பிக்கப்பட்ட பிறகு, மிகுந்த சர்ச்சையைக் கிளப்பி, பா.ஜ.க விலும், ஏனைய சங்க அமைப்புகளிலும் (அத்வானியின் ஜின்னா அத்தியாயத்திற்குப் பிறகு மற்றொரு) புயலை உருவாக்கிவிட்டது. இது இங்கு குல்கர்னியின் அனுமதி பெறப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு பதிப்பிக்கப்படுகிறது. இதன் ஆங்கில மூலத்தை இங்கே படிக்கலாம்.

----------------------------

2004 பொதுத்தேர்தலும், அதற்குப் பின்னும் - பி.ஜே.பி மற்றும் ஹிந்து இயக்கங்கள் எங்கே தவறின?

இங்கு சுற்றுக்கு விடப்பட்ட ஒரு விவாதக் கட்டுரையில், 'ஹிந்து இயக்கங்களின் தற்போதைய நிலை' பற்றி கூறும்போது பா.ஜ.க பற்றியும் சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்சியின் ஒரு உறுப்பினன் என்ற முறையில், இதைப் பற்றிய எனது கருத்துக்களை கூறுவது எனது கடமையாகும். இவையனைத்தும் என்னுடைய சொந்தக் கருத்துக்கள் என்றும் இது கட்சியின் நிலையல்ல என்பதையும் தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த வாய்ப்பை, நம் நாடும், ஹிந்து சமுதாயமும் எதிர்கொண்டிருக்கும் சில முக்கிய பிரச்சனைகள் பற்றியும் பேசுவதற்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.

'ஹிந்து வருத்தம்' தான் பா.ஜ.க வின் 2004 தேர்தல் தோல்விக்குக் காரணமா? இல்லை

(சுற்றுக்கு விடப்பட்ட) விவாத அறிக்கையில் 2003-லிருந்தே இருந்துவரும் 'தே.ஜ.கூ குறிப்பாக பா.ஜ.க.வின் மீதான ஹிந்து வருத்தத்தின் வெளிப்பாடு' என்று கூறப்பட்டுள்ளது.

இது பல கேள்விகளை எழுப்புகிறது. எந்த ஹிந்து வருத்தம் கொண்டிருந்தார்? 'ஹிந்து வருத்தம்' என்று கூறுவது, எல்லா ஹிந்துக்களையும் குறிக்கின்றதா. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் பாதையைப் பார்த்தால் இக்கருத்து தவறு என்று எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

தன்னுடைய சிறந்த நாட்களில் கூட பா.ஜ.க. 25 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றதில்லை - இது தெளிவுபடுத்துவது என்னவென்றால் ஹிந்து வாக்காளர்களில் 25 சதத்திற்கும் குறைவானோர் தான் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். அதிலும் பெரும்பான்மையோர், பா.ஜ.க.வின் நேர்மைக்கும், நல்ல மற்றும் திறமையான தலைவர்களுக்காகவும், அதன் தேசிய செயல்திட்டத்திற்காகவும், கட்சியின் கட்டுக்கோப்புக்காகவும் தான் வாக்களிக்கிறார்களே தவிர, 'ஹிந்து அரசியல் திட்டம்' என்று சிலரால் வர்ணிக்கப்படும் கூற்றுக்காக அல்ல. மேலும் ஆளுங்கட்சிகளின் மீது அவர்கள் கொண்டிருந்த கோபங்களும் - பல கட்சி ஜனநாயக ஆட்சிமுறையில் இது தவிர்க்க முடியாதது - கூட மக்களை நமக்கு வாக்களிக்க தூண்டியிருக்கும். பா.ஜ.க.வின் இந்த 'தேசிய நோக்கை' நாம் 'ஹிந்து அரசியல் திட்டம்' என்று சிறுமைப்படுத்த முயன்றால், அது மிக தவறான மற்றும் கடுமையான விளைவுகளில் சென்று முடியும்.

பா.ஜ.க.விற்கு (முந்தைய காலங்களில் ஜனசங்கத்திற்கு) எதிரான கட்சிகள் எப்போதுமே பாதிக்கும் மேற்பட்ட (ஹிந்துக்கள் உட்பட) வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று வந்துள்ளன. இதுவரை நடந்துள்ள பெரும்பான்மையான தேர்தல்களில், காங்கிரஸ் மட்டுமே, பா.ஜ.க (அல்லது ஜனசங்கம்) வை விட அதிக வாக்குகளைப் பெற்று வந்திருக்கிறது.

இந்த உண்மைகள் பல விஷயங்களைத் தெளிவு படுத்துகின்றன. முதலில், பா.ஜ.க.வின் மீது தேசிய அளவிலான 'ஹிந்து கோபம்' என்ற ஒன்று இல்லை. ஹிந்துக்களில் சிலர் அம்மாதிரி நினைத்திருப்பதற்கும், பா.ஜ.க.விற்கு வாக்களிக்காமல் இருந்திருப்பதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், இவர்களின் எண்ணிக்கை கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கும், ஆட்சியில் இருந்து இறக்குவதற்கும் போதுமானதல்ல. வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் அவ்வாறு நினைத்தால் தான் இது நடக்க முடியும். இந்தியாவில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், தேர்தல் முடிவுகளை பெரும்பான்மை ஹிந்துக்களின் வாக்குகள் நிர்ணயம் செய்கின்றன.

இது தெளிவாக ஒரு உண்மையை உணர்த்துகிறது. ஹிந்துக்களில் பெரும்பான்மையானோர், 'ஹிந்து' என்ற முறையில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ என்றுமே வாக்களித்ததில்லை - இனிமேலும (நாட்டில் சாதாரண நிலை நிலவும் போது)் செய்யப்போவதில்லை.

இரண்டாவதாக, பா.ஜ.க.வின் பால் வெறுப்புக் கொண்ட சிறுபான்மையான ஹிந்துக்கள், இந்தியாவில் 'ஹிந்து அரசியல் திட்ட'த்தைக் கொண்ட, 'ஹிந்து அரசியல் கட்சி'க்கு அதிகபட்ச ஹிந்துக்கள் வாக்களிப்பார்கள், என்று நினைத்தால் அது பகல் கனவாகத் தான் முடியும். இது சாத்தியமில்லாதது என்பது தவிர, நாட்டிற்கு மிகுந்த கெடுதலையும் ஏற்படுத்தக்கூடியது. இப்படி ஒரு 'ஹிந்து வாக்கு வங்கி' உருவாவது, இந்தியாவில் ஜனநாயகத்திற்கு எதிரானதாக இருக்கும். நம் எல்லோருக்குமே, 'முஸ்லிம் வாக்கு வங்கி', நாட்டில் விளைவித்திருக்கும் தீமைகள் நன்றாகத் தெரியுமாதலால், இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.

மூன்றாவதாக, பா.ஜ.க. ஹிந்துக்களின் உணர்வுகளை புறக்கணித்து விட்டது என்று குறை கூறுவதெல்லாமே ஒரு பக்கமாகவே இருந்து வந்துள்ளது. இப்படிக் குற்றம் சொல்பவர்களை எதிர்த்து விவாதம் நடத்த பா.ஜ.க.வானது என்றுமே முயன்றதில்லை. சமீப காலங்களில், கட்சியில் கட்டுப்பாடு குறைந்திருந்தாலும், இந்த விஷயத்தில் கட்சியானத பொறுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொண்டுள்ளது.

அயோத்தி விவகாரத்தில் நிதர்சனமான அணுகுமுறையின் தேவை

விவாத அறிக்கையானது 'ஹிந்து அரசியல் திட்டத்தை, குறிப்பாக அயோத்தியா திட்டத்தைக்' காற்றில் பறக்க விட்டு விட்டதாகக் கூறுகிறது. சென்ற ஆட்சியின் போது தனிப் பெரும்பான்மை இல்லாமல், தே.ஜ.கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அடல்ஜியின் அரசாங்கம் இந்த விஷயத்தில் வேறு எதுவும் செய்திருக்க முடியாது என்பது நிதர்சனம் - அதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.

ராமர் கோயில் கட்டுவதற்கு மூன்று வசிகள் இருக்கின்றன - பாராளுமன்றம், நீதிமன்றம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சுமூகமாக தீர்த்துக்கொள்வது - இவற்றில் பாரளுமன்றத் (சட்டம் இயற்றுதல்) தீர்வுக்கு வாய்ப்பில்லை என்பது ஆரம்பத்திலிருந்தே எல்லோருக்கும் தெரிந்ததுதான். 2002-ல் நடந்த சர்ச்சைக்குரிய 'ஷிலா பூஜை'க்குப் பிறகு நீதிமன்றத் தீர்வும் கூட கடனமானதாக ஆகிவிட்டது. நீதிமன்றம் இந்த விஷயத்தில் எப்போது தீர்ப்பு வழங்கும் என்பதோ, அது என்னவாக இருக்கும் இன்பதோ யாராலுமே யூகிக்க முடியாத விஷயங்கள். இந்த காரணங்களால், மூன்றாவது தீர்வான 'இரு தரப்புப் பேச்சுவார்த்தை' மட்டுமே எஞ்சியுள்ளது. கிட்டத்தட்ட பா.ஜ.க.வில் உள்ள அனைவருமே, ராமஜன்மபூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இதுவே எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க மற்றும் சரியான தீர்வாக இருக்கும் என்று தற்போது ஏகமனதாகக் கருதுகின்றனர். ஆனால், இது வடிவம் பொறுவதற்கு, ஹிந்து மற்றும் முஸ்லிம் பிரதிநிதிக்களுக்கிடையே முதலில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். இதற்கு, இருதரப்புக்கிடையிலான நம்பகத்தன்மை, புரிந்துகொள்ளல் மற்றும் நல்லெண்ணம் ஆகியவை நிலவும் சூழலும் வேண்டும்.

2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, பேச்சுவார்த்தைகான வாய்ப்பும் குறைந்து விட்டது. உச்சநீதிமன்றம் கூட, கலவரங்களுக்குப் பிறகு, அயோத்தியாவின் 'ஷிலா பூஜை' விஷயத்தில் தன்னுடைய நிலையை கடுமையாக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறலாம். இதுவே, வாஜ்பாயின் அரசுக்கிருந்த சிறிய பாராளுமன்ற வழியிலான தீர்வு, என்ற வாசலையும் அடைத்துவிட்டது.

இப்படிப்பட்ட சிக்கல்களிலும் கூட, வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சியானது, அயோத்தியா பிரச்சனையத் தீர்ப்பதற்குத் தீவிரமாக முயன்றது. இவையும் கூல 2004 பொதுத் தேர்தல்களினால் தடைபட்டுப்போயின.

இவையெல்லாம் நன்கு தெரிந்தும்கூட சிலர், பா.ஜ.க.வை குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களெல்லாம், இவ்விஷயத்தில், கூட்டணிக் கட்சிகளுடன் சண்டையிட்டு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, அயோத்தியாவையும், ஹிந்து அரசியல் திட்டத்தையும் முன்வைத்து பா.ஜ.க. தேர்தலை சந்தித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களா? அப்படியானால், மக்கள் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை அளித்திருப்பார்கள் என்று கருதுகிறார்களா? அப்படியே நடந்திருந்தால் கூட - நீதிமன்ற குறுக்கீடுகள், முஸ்லீம்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் அப்படி ஒரு முடிவான திட்டத்திற்கு பெருவாரியான ஹிந்துக்களின் ஆதரவின்மை - இவற்றையெல்லாம் கடந்து பா.ஜ.க. ராமர் கோயில் கட்டுவதைத் தொடங்கியிருக்க முடியுமென்று நினைக்கிறார்களா?

வாஜ்பாய்க்கு முன்னால் இருந்த எந்தவொரு பிரதமரும், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் - அயோத்தி விஷயத்தில் ராமர் கோயில் வேண்டுமென்ற தெளிவான கருத்தைக் கூறியதில்லை என்பதை இங்கு நினைவு கூற வேண்டும். கூட்டணியின் தலைவர் என்ற முறையில், கூட்டணியிலிருந்த கட்சிகளில் ஒன்றைத் தவிர (அக்கட்சி கூறிய 'தீர்வு' என்னவென்பது வேறு விஷயம்), மற்ற எல்லாமே அயோத்தி விஷயத்தில் எந்த்வொரு நடவடிக்கையையும் விரும்பாதபோது, வாஜ்பாய் செயலாற்றிய விதம் பாராட்டப்பட வேண்டியதே தவிர, கண்டிக்கப்பட வேண்டியதல்ல.

பா.ஜ.க. தலைவர்கள் 'போலி மதச்சார்பின்மைவாதிகளா'?

தே.ஜ.கூ/ பா.ஜ.க ஹிந்து எழுச்சி இயக்கம் வலுப்பெறுவதற்கு தகுந்ததொரு அரசியல் மற்றும் அறிவார்ந்த சூழலையோ உருவாக்கவில்லை என்றும் குற்றம் சொல்கின்றது அந்த விவாத அறிக்கை. அது மேலும், 'கட்சித் தலைவர்கள் பாகிஸ்தான் விஷயத்தில் போலி மதச்சார்பின்மை வேடம் போட முனைந்தார்கள்' என்றும் சொல்கிறது. 'ஹிந்து எழுச்சிக்கு' பிறகு வருகிறேன். ஆனால், அதற்கு முன்னால், குறிப்பாக வாஜ்பாயையும், அத்வானையையும் பற்றிய மிகக் கடுமையான, இரண்டாவது குற்றச்சாட்டை அப்படியே விட்டு விட முடியாது.

  • வாஜ்பாயின் 'லாகூர் பஸ் பயணம்' போலி மதச்சார்பின்மையா?
  • கார்கிலில் பாகிஸ்தானின் நம்பிக்கை துரோகத்துக்கு, தே.ஜ.கூ.வின் பதிலடி போலி மதச்சார்பின்மையா?
  • முஷாரப்பை ஆக்ராவிற்கு அழைத்தது (இதில் அத்வானியின் பங்கு குறிப்பிடத்தக்கது) போலி மதச்சார்பின்மையா?
  • இந்திய கிரிக்கெட் அணியை 2004-ல் பாகிஸ்தானுக்கு விளையாட அனுப்பியது போலி மதச்சார்பின்மையா?
  • 2004 ஜனவரி சார்க் மாநாட்டின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பாகிஸ்தான் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதக் குழுக்களை - தன்னுடைய மண்ணிலிருந்தோ அல்லது ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்தோ - செயல்பட அனுமதிப்பதில்லை என்று வெளிப்படையாக கூறுமாறு செய்யப்பட்டதே, அது போலி மதச்சார்பின்மையா?
  • தீவிரவாதிகளின் பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு, தே.ஜ.கூ பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பதில்லை என்று முடிவு செய்ததே, அது போலி மதச்சார்பின்மையா?

பாகிஸ்தான் தொடர்பான வேறு விஷயத்தில் எதுவும் போலி மதச்சார்பின்மை பின்பற்றப்பட்டதா? அப்படியானால் அது இங்கே விவாதிக்கப்பட வேண்டும்.

நாம் மதச்சார்பின்மைக்கு எதிரானவர்களா? நாம் கூறும் உண்மையான மதச்சார்பின்மையை நாம் பின்பற்றுகிறோமா?

ஹிந்து விழிப்புணர்வையும் (renaissance), எழுச்சியையும் உருவாக்க சபதம் பூண்டுள்ள அனைவரும் இரண்டு அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. நாம் மதச்சார்பின்மைக் கொள்கையை ஆதரிக்கிறோமா, இல்லையா? நாம் உண்மையான மதச்சார்பின்மை (எல்லா மக்களும் சமம் - 'sarva panth samabhav') என்று கருதுவதை, பின்பற்ற சரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோமா?

போலி மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மைவாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தினால், உந்தப்பட்டு நாம் பல சமயங்களில் உண்மையான மதச்சார்பின்மையைக் கூட எதிர்க்க முயல்கிறோம். இதனால், முதல் கேள்விக்கு பதில் சொல்வது முக்கியமாகிறது.

இரண்டாவது கேள்வியைப் பொருத்தவரையில், இதில் அரசியல் மற்றும் நீதி ஆகிய இரு பரிமாணங்கள் உள்ளன.

  • எல்லோரையும் சமமாகக் கருதவேண்டிய நாம், ஹிந்துக்களல்லாத, குறிப்பாக முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளை எவ்வளவு தூரம் மதிக்கிறோம்?
  • ஹிந்துக்களல்லாதவர்களின் - மத நம்பிக்கைகள், கலாச்சாரம், சமூக பழக்கங்கள், த்னி நபர் ஒழுக்கம் - ஆகியவற்றிலிருக்கும் நல்ல விஷயங்களை நாம் என்றாவது வெளிப்படையாக பாராட்டியிருக்கிறோமா?
  • ஹிந்துக்களல்லாத, குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமூக-பொருளாதார பிரச்சனைகளை நாம் பரிவுடன் எதிர்கொண்டிருக்கிறோமா?
  • "எல்லோருக்கும் நீதி, ஆனால் எந்த ஒரு குழுவையும் திருப்திப்படுதும் போக்கு இல்லை" என்று நாம் உண்மையாக நம்பினால், ஏழை முஸ்லிம்களின் வளர்ச்சிக்குரிய சரியான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோமா?
  • அப்பாவி ஹிந்துக்களின் கொலையைக் கண்டிக்கும் நாம், கலவரங்களில் இறக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறோமா? (இன்று வரையிலும் குஜராத் நம்மைத் துரத்திவருகிறது. நாட்டின் சாதாரண ஹிந்துக்களும், ஹிந்து அறிவு ஜீவிகளும், குஜராத் விஷயத்தைப் பொருத்தவரை நம்மை சந்தேகத்துடன் தான் பார்க்கின்றனர். நிச்சயமாக, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் செயல்படுத்தப்பட்ட கோத்ரா, கடுமையான உந்துதலை ஏற்படுத்தக்கூடியது தான். போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள், குஜராத்தை வைத்து இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது திட்டமிட்டு விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார்கள் தான். சர்வதேச தொடர்புகளுடன் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைவுகளை காஷ்மீரிலும், பங்களாதேஷிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பார்க்கும் ஹிந்துக்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன தான். ஆனால் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது: கோத்ராவுக்குப் பிந்தைய கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டனவா? குஜராத் சம்பவங்கள் (கோத்ராவும் தான்) நமது நாட்டின் மீதும், கலாச்சாரத்தின் மீதும், தீராத களங்கத்தை ஏற்படுத்திவைட்டதை ஹிந்து இயக்கத்தின் எல்லா பிரிவினரும் ஒருமனதாக ஒத்துக்கொள்கிறோமா? பொய்ப் பிரச்சாரத்தைத் தவிர்த்து, இவையும், சில தலைவர்களின் பொறுப்பற்ற அறிக்கைகளும் ஹிந்து இயக்கத்தின் மதிப்பைக் இந்தியாவிலும், வெளியிலும் குறைக்கவில்லையா? 'தாலிபான்' கலாச்சாரம் ஹிந்து இயக்கத்திலும் ஊடுருவியுள்ளதாக சில தலைவர்களும், கட்டுரையாளர்களும் புகார் கூறுமளவு நிலைமை முற்றி விட்டது எதனால்? இறுதியாக. வருத்தப்படத்தக்க சம்பவங்கள் சில சமயங்களில் நடக்கும் தான். ஆனால், அப்படி நடக்கும் போது அப்போதைய அரசுடனும், மற்ற சமூக-மத-அரசியல் இயக்கங்களுடன் இணைந்து அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது நமது கடமையில்லையா? மேற்சொன்ன அனைத்து கேள்விகளுக்கும் நாம் உண்மையாகவும், விளக்கமாகவும் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும்.)

முஸ்லிம்கள் வாக்காளர்கள் மட்டும் தானா? சக குடிமக்கள் இல்லையா?

பா.ஜ.க.விலும் மற்றும் ஹிந்து இயக்கங்களிலும் இருப்பவர்களின் பதில்கள் தான் தேசிய அரசியலில் பா.ஜ.க.வின் நிலையை முடிவு செய்யும். இது வரை நடைபெற்றுள்ள தேர்தல் முடிவுகள் ஒன்றை மட்டும் நிரூபித்துள்ளன - அது முஸ்லீம்களின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு கட்சியோ, கூட்டணியோ பெரும்பான்மையைப் பற்றி நினைக்கமுடியாது என்பதுதான். இப்படி இருக்கும் போது, முஸ்லீம்களை ஒதுக்கி விட்டு பா.ஜ.க. மட்டும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வரமுடியும் என்று யாராவது நினைத்தால், அது பகல் கனவாகத்தான் இருக்கும்.

இது நமக்கு விரும்பத்தகாத நிலையாக இருக்கலாம், ஆனால் இது தான் உண்மை. நாம் இந்த "ஹிந்துக்கள் மட்டும்" என்ற குறுகிய அணுகுமுறையைத் தொடர்ந்தால், முன்னாளில் காங்கிரஸ் இருந்ததைப் போன்ற வலுவான நிலையை என்றுமே அடைய முடியாது. இந்த நிலை நாம் மாநில மற்றும் தேசிய அளவில் நீண்டகால கூட்டணிகள் அமைப்பதற்கு எதிராக அமையும். நேரு-இந்திரா-ராஜீவ்-சோனியா-ராகுல் என்று ஒரே குடும்ப ஆட்சி தொடர்வதற்கும் இதுவே வலுவான காரணமாக இருக்கும்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றில் உறுதி, நாட்டில் அனைத்து தரப்பினரிடையேயும் நிலையான ஆதரவு, நல்லாட்சியைப் பற்றிய தெளிவு, மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வை மற்றும் நல்ல மாற்றத்திற்கான திட்டங்கள், நாட்டை நீண்ட காலத்துக்கு ஆளும் உறுதி - ஆகியவையெல்லாம் இல்லாமல் எந்தவொரு வலுவான தேசியக் கட்சியும் நாம் கனவு காணும் வளமான, வலிமையான, ஏழ்மையற்ற, மிகச் சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட பாரதத்தை உருவாக்க முடியாது.

ஆனால், பல நேரஙகளில் ஒரு வாதம் எழுப்பப்படுகின்றது. 'பா.ஜ.க. முஸ்லீம்களை நெருங்க முயற்சிக்கக் கூடாது, ஏனென்றால், எப்படியிருந்தாலும் அவர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கப் போவதில்லை', என்ற இந்த வாதம் இரண்டு காரணங்களால் ஆபத்தானது.

முதலாவது - "முஸ்லீம்கள் நமக்கு எதிராக வாக்களிப்பதால், நாம் அவர்களின் பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புக்களையும் புறக்கணிக்க வேண்டும்" என்ற வாதம், நாம் எதை போலி-மதச்சார்பின்மை என்று வர்ணிக்கிறோமோ, அதனுடைய இன்னொரு வடிவம் தான். இந்த இரண்டு அணுகுமுறைகளுமே, முஸ்லீம்களை சக குடிமகன்களாக இல்லாமல் வெறும் வாக்கு வங்கியாகவே பார்க்கிறது.

இரண்டாவது - ஏற்கனவே நான் கூறியது போல், 15 கோடி முஸ்லீம்களை நாம் ஒதுக்குவதன் மூலம், அவர்களின் அனைத்து வாக்குகளையும் எதிர்க்கட்சிகளுக்கு நாமே கொடுத்து விடுகிறோம். இது மற்ற கட்சிகளுக்கு குறிப்பாக காங்கிரஸுக்கு ஒரு முன்னிலையை தேர்தலுக்கு முன்னமேயே கொடுத்து விடுகின்றது. குறைந்தபட்சம் 70 முதல் 100 மக்களவைத் தொகிதிகளில், பா.ஜ.க வேட்பாளர்களை வீழ்த்துவதற்கு இதுவே போதுமானதாகும். உ.பி, பீஹார் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு நீண்ட காலமாக வாக்களித்தவர்களே, நம்மை விட்டு விலகிச் செல்லும் நிலையில், கட்சியின் எதிர்காலம் பற்றி சொல்லவேண்டியதில்லை.

நமது குறிக்கோள் - பா.ஜ.க.வை 'அனைவருக்குமான மற்றும் எங்கும் நிறைந்த' கட்சியாக மாற்றுவது

வாஜ்பாயின் ஆறு ஆண்டு ஆட்சியின் போதும், 2004 தேர்தல் தோல்விக்குப் பிறகும் - 'எல்லோருக்கும் எல்லாமுமாக பா.ஜ.க. முயற்சித்ததாக' பலரும் கூறி வருகின்றனர். நம்முடைய முக்கிய வாக்காளர்களாக இல்லாத ஒரு இனத்தை, நாம் திருப்திப்படுத்த முயல்வதான அடிப்படையில் அமைந்த ஒரு குற்றச்சாட்டு இது.

இது ஒரு அடிப்படைக் கேள்வியை என்னுள் எழுப்புகிறது. நம்மால் எல்லா இந்தியர்களுக்கும் பொதுவாக இருக்க முடியவில்லையென்றால், அனைத்துத் தரப்பினரையும் சமமாக பார்க்க முடியவில்லையென்றால், நாம் ஏன் அரசியலில் இருக்க வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமாகத் தான் நம்மால் இருக்க முடியுமா? இது அரசியல் நீதி (பதவியில் இல்லாத போது), ராஜ தர்மம் (பதவியில் இருக்கும் போது) இரண்டுக்கும் எதிரானது. இந்தியாவெங்கும் நிறைந்திருக்கும் மற்றும் அனைத்து இந்தியர்களுக்குமான கட்சியாக இருக்க வேண்டுமென்று பா.ஜ.க முடிவு செய்திருந்தது. அனைத்துத் தரப்பினரையும் அணுகுவதற்கு நாம் முயற்சி செய்யவில்லை (எந்த எதிர்ப்பு வந்தாலும்) என்றால், நாம் அநீதி இழைத்தவர்களாவோம். இது நம்முடைய அரசியல் தேவை மட்டுமல்ல, நம்முடைய கொள்கைப்பூர்வமான கடமையும் கூட.

நான்கு சமூக விஷயங்களில், நாம் செய்ய வேண்டியவை

முடிக்கும் முன்பு, இரண்டு முக்கிய பிரச்சனைகளைப் பற்றி கூற விரும்புகிறேன். முதலாவது, சமூக நாற்கரத்தை இணைக்கும் விஷயங்கள் - சமூக மாற்றம் (social reform), சமூக நீதி (social justice), சமூக நல்லிணக்கம் (social harmony), சமூக சேவை (social service). இவை நான்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த நான்கு விஷயங்களிலும் நாம் அதிக கவனம் செலுத்தும்போது தான், அதிலும் குறிப்பாக பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகள் ஆகியோரிடையே நாம் வேலை செய்வதன் மூலம் தான், கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் தீவிரவாத முஸ்லீம் குழுக்கள் இரண்டையும் வெல்ல முடியும்.

ஏற்கனவே பல்வேறு ஹிந்து மத, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் சேவை தொடர்பான இயக்கங்கள் பாராட்டும்படியான முறையில் மேற்குறிப்பிட்ட நான்கு முனைகளிலும் பணியாற்றி வருகின்றன. ஆனாலும் இந்த முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நாம் திட்டமிட்டு, கூட்டாக செயல்பட வேண்டும். இதற்கு நமக்கு மீடியாவையும் சரியாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

தேவை - வளர்ச்சிக்கான ஒரு புதிய அணுகுமுறை

இறுதி வார்த்தை: நம்முடை கலாச்சாரம், பொருளாதார நீதி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு புதிய மாற்றத்திற்கான குறிக்கோள். முந்தைய லைசன்ஸ்-ராஜ் எனப்படும், கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையை விட, புதிய பொருளாதாரக் கொள்கை சிறந்தது தான். இருந்தாலும், நம்முடைய எல்லா பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் அது தீர்வாக அமையாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் பல தீய விளைவுகளை நாம் ஏற்கனவே கண்டு வருகிறோம். உதாரணமாக, பணக்காரனுக்கும் - ஏழைக்குமான வித்தியாசமும், நகர்ப்புறத்திற்கும் - கிராமப்புறத்திற்குமான வித்தியாசமும் 1947-க்குப் பின் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகி வருகிறது. இந்த புதிய பொருளாதாரக் கொள்கையானது, நம்முடைய பொதுச் சொத்துக்களை, தனியாரின் வசம் ஒப்படைக்கப்படுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் சில தனி நபர்கள் மற்றும் குடும்பங்கள் 5-10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்ப்பதை நாம் எந்த அடிப்படையில் நியாயப்படுத்த முடியும். இன்னொரு புறம், கோடிக்கணக்கான நம்முடைய இளைஞர்கள் 1000-2000 ரூபாய் மாத சம்பளத்திற்காக சில சமயங்களில் சுய கௌரவத்தையும் இழந்து திண்டாடுவதையும் பார்க்கிறோம்.

கோடிக்கணக்கான ஹிந்துக்களை (மற்றும் ஹிந்து அல்லாதவர்கள்) ஏழைகளாக வைத்திருக்கும் ஒரு பொருளாதாரம், ஹிந்து விழிப்புணர்வை என்றுமே ஏற்படுத்த முடியாது. நாம் ஏன் விவேகானந்தர், தீந்தயாள் உபாத்யாயா, மற்றும் காந்தீய ஷோஷலிசத்தை மறந்து போனோம் அல்லது புறக்கணித்தோம்.

இது போன்ற சொத்துக் குவிப்பு, ஏழைகளின் எண்ணிக்கையும் வளந்து வரும் நிலையில் மூன்று விளைவிகளை ஏற்படுத்தும். முதலாவது நம்முடைய ஜனநாயகம் பணக்காரர்களின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. அரசாங்கக் கொள்கைகளிலிருந்து, நீதிமன்றம், அதிகாரவர்க்கம், அரசியல் கட்சிகள், தேர்தல் ந்தைமுறைகள், மீடியா என்று எல்லாமே இன்று ஏதோ ஒரு அளவில் பணக்காரர்களின் கையில் தான் இருக்கிறது.

இரண்டாவது, பொருளாதார ரீதியில் பிந்தங்கியோரையும், உரிமை ம்றுக்கப்பட்டோரையும், நாட்டை பிளக்கும் எண்ணம் கொண்ட பயங்கரவாத மற்றும் தேசத்துக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக்கொள்ள முனையலாம். 'சிகப்பு ரிப்பன்' எனப்படும் நக்ஸல்கள், கீழே ஆந்திராவிலிருந்து (இப்போது கர்நாடகாவின் சில பகுதிகளிலும் கூட), ஒரிஸ்ஸா, பீஹார், உ.பி வரை ஏழ்மை அதிகமுள்ள பரவியிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, மேற்கின் தாக்கத்தினால் பின்பற்றப்படும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை, நுகர்வோர் சந்தை மற்றும் என்றுமே திருப்திப்படுத்த முடியாத பேராசை ஆகியவற்றை வளர்க்கும் முறையினால் - சுற்றுச்சூழலிலும், கலாச்சார ரீதியிலும் பாதிப்புக்களையும் ஏற்பத்த வல்லது.

ஹிந்து இயக்கங்கள் இந்த கீழான போக்குகளை உணராமலிருக்கலாம், ஆனால் அது அவற்றின் அழிவில் போய் முடியும்.

மொழிபெயர்ப்பு: ச பாஸ்கரன்

1 Comments:

At 26 July, 2005 04:46, Blogger Baskaran Sankaran said...

பாராட்டுக்கு நன்றி! இது என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

 

Post a Comment

<< Home