இது இலவசங்களின் காலம்
இலவச பஸ் பாஸ், இலவச மின்சாரம், இலவச சைக்கிள், இலவச மென்பொருள் - இந்த பட்டியல் இப்போதைக்கு முடிகிறார்போலில்லை.
தமிழக அரசும், மத்தியிலுள்ள தமிழக அமைச்சர்களும் நடத்தி வரும் இந்த இலவச விளையாட்டு 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலைக் குறிவைத்து ஆடப்படுகின்றன. தேர்தல் முடிவு பற்றி கவலைப்படும் அரசியல் கட்சிகள் இத்திட்டங்களின் பயனைப் பற்றியோ, செலவை பற்றியோ அல்லது இவையெல்லாம் நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை.
இந்த இலவச விளையாட்டின் தொடர்ச்சியாக வெகு சமீபத்தில் தமிழக அரசு மூன்று திட்டங்களை ஒரே நாளில் (ஜூன் 2) அறிவித்துள்ளது/துவக்கியுள்ளது.
- 1 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இலவச செல்போன்கள்
- பிளவுபட்ட உதடு - மேல் அண்ணமுள்ள 4000 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை
இலவச புத்தகங்களினால் அரசுக்கு ஏற்படும் செலவு 83 கோடி. பயன்பெறும்(!!) மாணவ, மாணவியர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர். இதில் யோசிக்கத்தக்க அம்சம், இப்படி அனைவருக்கும் இலவசமாகக் கொடுப்பது தேவைதானா? நிச்சயமாக இந்த ஒரு கோடி மாணவ, மாணவியரின் பெற்றோரும் புத்தகங்கள் வாங்க முடியாத அளவுக்கு ஏழைகளல்ல. அப்படி இருந்திருந்தால் சென்ற ஆண்டுகளில் அவர்கள் எப்படி புத்தகங்கள் வாங்கியிருப்பார்கள்? ஏற்கனவே பல்வேறு அரசு சாரா அமைப்புகளும் (ரசிகர் மன்றங்கள் உட்பட), தனிப்பட்டோரும் கடந்த ஆண்டுகளில் ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வந்திருக்கிறார்களே. வரும் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அரசு என்ன செய்யப் போகிறது?
இம்மாதிரியான கவர்ச்சித் திட்டங்களை விட்டு விட்டு, அரசாங்கம் கல்வியை மேம்படுத்துவதற்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம். எத்தனை அரசுப் பள்ளிகளில் நூலகமோ, நல்ல ஆய்வுக்கூடமோ இருக்கிறது? குடிநீர் வசதியும், கழிவறை வசதியும் இன்னும் பல பள்ளிகளில் பேச்சிற்குக்கூட இல்லை. உருப்படியான கரும்பலகையும், மேஜை நாற்காலிகளும் இல்லாததை எங்கே போய்ச் சொல்ல. "அடப் போப்பா, எத்தனையோ கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியரே இல்லை, அட இருந்தாலும் வருவதில்லை", என்று சொல்வது கேட்கிறது. ஆனால் என்ன செய்வது, இதையெல்லாம் செய்தால், 'ஜெயலலிதா இலவசமாக கொடுத்தது' என்று சொல்லி, தேர்தலில் ஓட்டுக் கேட்க முடியாதே.
இரண்டாவது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இலவசமாக (தெரிந்ததுதானே, ஏன் திரும்ப திரும்ப சொல்லவேண்டும்) 10,000 செல்போன்கள். இது ஜெயலலிதா செலுத்தும் செஞ்சோற்றுக்கடன். காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றிக்கு பதில் மரியாதை.
இத்திட்டத்தின் கீழ் போனும், கனெக்-ஷனும் இலவசமாக வழங்கபடுகின்றன. நல்ல வேளை, மாத பில் பணத்தை குழுக்களே கட்ட வேண்டுமாம். அது சரி, அந்த ஊரில் செல்போன் கட்டமைப்பே (mobile network) இல்லாவிட்டால் செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்வது? வீட்டுக் குழந்தைகள் அதை வைத்து விளையாட வேண்டியதுதான். கிராமப்புற குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு ரூபாய் 4000 செலவில் அரசு செல்போன் கொடுக்கிறது. அப்படியே இல்லாவிட்டாலும் இலவசமாக வாங்கி 2000-3000 க்கு விற்றால், வாங்க ஆளில்லையா என்ன? தெனாலி ராமன், பூனை வளர்த்த கதைதான் நினைவுக்கு வருகிறது.
அதெல்லாம் சரி எந்த நிறுவனத்தின் போன் வழங்கப்படும் - நோக்கியா, சாம்சங், எல்ஜி...? எந்த சர்வீஸ் நிறுவனம் (service provider) தேர்வு செய்யப்படும் - பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ், ஏர்டெல்...? இந்த விவரங்களெல்லாம் இன்னும் தெரியவில்லை. ஊழல் செய்வதற்கு அருமையான வாய்ப்பு! விடுவார்களா அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்? எந்தப் பெட்டி பெரியதோ அதை வைத்து முடிவு செய்வார்கள் போலும்.
மூன்றாவது திட்டம் ('புரட்சித் தலைவியின் புதுமைத் திட்டம்: உதட்டுப் பிளவு சரி செய்யும் திட்டம்,' என்று அடுத்த தேர்தலில் விளம்பரம் செய்யலாம்), இந்தியாவிலேயே முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறதாம் (இதில் பெருமை வேறு). பிளவுபட்ட உதடு, மேல் அண்ணமுள்ள 4000 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை (plastic surgery) மூலம் இக்குறை சரி செய்யப்படுமாம். இத்திட்டத்தின் துவக்க விழா ஜூன் 2 அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது. ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ 25000 செலவு, கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்த செலவு ரூ 10 கோடி.

இதில் குழந்தைகளுக்கு பொம்மைகளும், பரிசுப்பொருட்களும் வேறு அம்மா பரிசளித்தார்களாம். இந்த வகையில் செலவு தனி. அறுவை சிகிச்சையிலும், மருந்து மாத்திரைகளிலும் தவறு நேர்ந்து குழந்தைகளுக்கு ஏதாவது ஆகாமலிருந்தால் சரி. அப்படியே ஆனால் கூட இழப்பீடு கொடுத்து ஓட்டு வாங்கலாம். இப்போது தான் முகத்தில் (உதட்டிலிருந்து) ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் கழுத்து, உடம்பு, இடுப்பு, கால் என்று எத்தனையோ இருக்கின்றன. தேர்தலுக்குள் அம்மா, தமிழ்நாட்டை நோய்களோ, உடற்குறைபாடுகளோ இல்லாத மாநிலமாக ஆக்கிவிடுவார்கள் என்று நம்பலாம்.
இன்னும் கூட அரசு மருத்துவமனைகளின் நிலை, நோயாளிகளின் நிலையை விட மோசமாக இருக்கிறது. மருந்துப் பற்றாக்குறை, மருத்துவர்கள் இல்லாமை (சொந்த கிளினிக்-ல இருக்காங்கப்பா), சுகாதாரக்கேடு (பல நோயாளிகளுக்கு, அரசு மருத்துவமனையில் தான் நோய் முற்றுகிறது) இதெல்லாம் சர்வ சாதாரணம். கிராமங்களின் நிலையையோ கேட்கவே வேண்டாம்.
இன்னும் கூட அரசு மருத்துவமனைகளின் நிலை, நோயாளிகளின் நிலையை விட மோசமாக இருக்கிறது. மருந்துப் பற்றாக்குறை, மருத்துவர்கள் இல்லாமை (சொந்த கிளினிக்-ல இருக்காங்கப்பா), சுகாதாரக்கேடு (பல நோயாளிகளுக்கு, அரசு மருத்துவமனையில் தான் நோய் முற்றுகிறது) இதெல்லாம் சர்வ சாதாரணம். கிராமங்களின் நிலையையோ கேட்கவே வேண்டாம்.
அரிது அரிது ஆரம்ப சுகாதார மையம் திறந்திருப்பது அரிது,திறந்திருந்தாலும் டாக்டர் இருப்பது அரிது,டாக்டர் இருந்தாலும் மருந்து மாத்திரை இருப்பது அரிது...
என்று ஔவையார் பாணியில் பாட வேண்டியதுதான்.
எந்த அரசியல்வாதியாவது அரசு மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களுக்கெல்லாம் அங்கே போய்க் கஷ்டப்பட தலையெழுத்தா என்ன? வழக்கு வரும் போது, நெஞ்சு வலி வந்தால் அப்போலோவில் போய் படுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியது இது, செய்யக்கூடாதது இது, என்றெல்லாம் அரசியல் சட்டம் வரையறுக்கவில்லை. செய்ய வேண்டியதைச் செய்யாமல், மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்ற போர்வையில் மக்களை சோம்பேறிகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் இந்த அரசாங்கங்கள் மாற்றிக்கொண்டிருக்கின்றன. இப்படிக் கொடுத்தால் அரசாங்க கஜானா காலியாகிவிடுமே, என்ன செய்வது? அதைப் பற்றி நமக்கென்ன கவலை, உலக வங்கியிடம் கடன் வாங்கலாம். நம்முடைய சொந்தப் பணத்தையோ அல்லது கட்சிப் பணத்தையோவா கட்டப் போகிறோம்?
அம்மாவின் அடுத்த இலவச அறிவிப்பு எதுவாக இருக்கும்? உங்களுக்கு புதுமையாக ஏதேனும் திட்டம் தோன்றினால்
செல்வி ஜெயலலிதா,
இலவச (மன்னிக்கவும்) தமிழக முதல்வர்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.
என்ற முகவரிக்கு எழுதவும். சிறப்பான திட்டத்தை எழுதுவோருக்கு... அட அம்மா ஏதாவது இலவசமாக தருவாங்கப்பா.
1 Comments:
iam sriram katturai super ana pattu auto veetkku vanduda pogudu. amam.
Post a Comment
<< Home