10 July 2005

தமிழ் பத்திரிக்கைகளில் தொலைக்காட்சியின் ஆதிக்கம்

கொஞ்ச நாட்களுக்கு முன் தான் 'மெட்டி ஒலி' முடிந்தது. அப்பாடா! மூன்று ஆண்டுகளின் தொடர் அழுகை முடிந்தது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் அதை எதேச்சையாக சில நாட்கள் தான் பார்த்திருக்கிறேன். எனவே தொடர் பற்றி நான் எதையும் கூறப் போவதில்லை. ஆனால், 'மெட்டி ஒலி'க்குப் பிறகு தொலைக்காட்சியின் ஆதிக்கம், தமிழ்ப் பத்திரிக்கைகளில் அதிகரித்து விட்டதாகத் தோன்றுகிறது.

திருமுருகன் (மன்னிக்கவும், திருமுருகன் யாரென்று தெரியவில்லையென்றால் நீங்கள் தமிழராக இருக்க முடியாது), குமுதத்தில் ஒரு தொடர் எழுதுகிறாராம். எழுத்தாளர்கள், திரைப்படத்திற்கும், தொலைக்காட்சிக்கும் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தொலைக்காட்சியிலிருந்து எழுத்தாளரானது அனேகமாக இவராகத்தான் இருக்கும். டைரக்டராக இருந்தவர், எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இன்னொருபுறம், முன்னாளைய சித்தியும், இன்னாளைய செல்வியுமான ராதிகா. குமுதத்தில் ஒரு தொடரும், குங்குமத்தில் கேள்விகளுக்கு (வேறு யார், வாசகர்களுடைய கேள்விகளுக்குத் தான்) பதிலும் அளிக்கப் போகிறாராம். கேள்வி பதில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியதாம். தொடர் ராதிகாவின் சொந்த வாழ்க்கை பற்றியதாம், ஆஹா தமிழ் வாசகர்கள் ராதிகாவின் சுயசரிதையைப் படித்து தெளிவடைய(!?!?) வேண்டுமா? விடுவாரா விகடனார்! அபியின் (தேவயானி) கேள்வி பதில் ஆரம்பமாம். சபாஷ், சரியான போட்டி!

நடிகை என்பதும் ஒரு தொழில் தான். இவர்கள் எழுதுவதையெல்லாம் படிக்காமல் விமர்சனம் செய்வது கூட சரியல்ல தான். ஆனால், ராதிகாவும், தேவயானியும் பத்திரிக்கையில் எழுதுமளவுக்கு என்ன சாதித்தார்களென்று புரியவில்லை. தொழிலதிபராக இருந்து சாதித்தார்களா, சமூக சேவை செய்தார்களா, அல்லது விளையாட்டு வீராங்கனைகளா? எனக்குத் தெரிந்த வரை ரேவதி போன்றோர்கள் கூட சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது சரி, இவர்களெல்லாம் எழுதினால் யார் படிப்பது? அடுத்த கட்டமாக, ராதிகாவும், தேவயானியும் பத்திரிக்கை ஆசிரியராக வேண்டியதுதான் பாக்கி.

இப்போதெல்லாம் அட்டையைக் கிழித்து விட்டால், விகடனுக்கும், குமுதத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பது பரவலான பேச்சு. 'நடிகையின் கதை' பிரசுரித்த குமுதத்தைப் பற்றி ஆச்சரியமில்லை, ஆனால், et tu vikatan. நம்பர் 1, போட்டியில் தரத்தைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படுவது.

ஆனால், இப்போது கூட நல்ல பத்திரிக்கைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்கி குடும்பத்தின் பத்திரிக்கைகள், இதற்கு மிகச் சிறந்த உதாரணம். நம்பர் 1, யாரென்ற போட்டியில் கல்கி இறங்காது என்று நம்பலாம்.

சினிமா மற்றும் தொலைக்காட்சி மோகத்தில் மூழ்கியிருக்கும் தமிழனுக்கு குமுதம், குங்குமம் இவற்றை விட வேறு என்ன வேண்டும். ஏதோ ஒரு படத்தில் விவேக் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது,

"அதிகமா மலையாளப் படம் பாக்குற ஆம்பளையும் சரி,
அதிகமா மெகா சீரியல் பாக்குற பொம்பளையும் சரி,
வாழ்க்கையில உருப்பட்டதா சரித்திரமே இல்லை".

சரி சரி, அடுத்த மெகா சீரியலுக்கு நேரமாச்சு, அப்புறம் பாக்கறேன்.

பின் குறிப்பு:

1. அடுத்த போட்டி புலனாய்வு பத்திரிக்கைகளுக்கு இடையே தான். சரவண பவன் அண்ணாச்சி முதல் ஜெயலட்சுமி (கடவுளே! இவர் ஏதோ பத்திரிக்கையில் சுயசரிதை எழுதுவதாகப் பார்த்த ஞாபகம்), சீதாலட்சுமி வரை பட்டியல் ரொம்ப நீளமானது. இவர்களால் பத்திரிக்கைகள் பயனடைந்தனவா அல்லது பத்திரிக்கைகளால் இவர்கள் பயனடைந்தார்களா என்று சாலமன் பாப்பையா தான் சொல்ல வேண்டும். ஜெயேந்திரர் விவகாரத்தில் கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிக்கைகளும் வரம்பு மீறின என்றே சொல்ல வேண்டும். இவற்றைப் பற்றியெல்லாம் இன்னொரு நாளில்.

2. சாலமன் பாப்பையா என்று சொன்னதும் தான் நினைவுக்கு வருகிறது. பாப்பையாவுக்கும் லியோனிக்கும் என்ன வித்தியாசம்?
பதில்:
பாப்பையாவால் பிரபலமடைந்தது - பட்டிமன்றம்,
பட்டிமன்றத்தால் பிரபலமடைந்தவர் - லியோனி!!

0 Comments:

Post a Comment

<< Home