29 June 2005

விகி (wiki) - ஒரு அறிமுகமும், ஒரு வேண்டுகோளும்

நிச்சயமாக நீங்கள் விகிபீடியா (wikipedia) பற்றி அறிந்திருப்பீர்கள். இது, உலக வலையில் (world wide web) பல்வேறு தனி நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் என்சைக்ளோபீடியா (தகவல் களஞ்சியம்) போன்றது. விகிமீடியா பவுண்டேஷன் (Wikimedia Foundation) எனப்படும் லாப நோக்கில்லாத சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்படும் இதில் பல மொழிகளில் தகவல் களஞ்சியம், அகராதிகள், செய்திகள் போன்ற பல பகுதிகள் உள்ளன. இவை அனைத்தும் சுருக்கமாக விகி (wiki) என்றழைக்கப்படுகின்றன.

விகியின் நோக்கம், பல மொழி மற்றும் பல விதமான களஞ்சியங்களின் உருவக்கம், வளர்ச்சி, பயன்பாடு ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதும், விகியின் எல்லா பகுதிகளையும் உலக மக்களுக்கு இலவசமாக வழங்குவதுமாகும். விகியில் உள்ள அனைத்து தகவல்களும் லினக்ஸின் ஆதாரமான ஜி.என்.யு சுதந்திர லைசன்சை (GNU Free Documentation License) அடிப்படையாகக் கொண்டள்ளன. இதனால், விகியின் எந்த தகவலையும், யார் வேண்டுமானலும், சுதந்திரமாக நகல் எடுப்பதும், பகிர்ந்துகொள்வதும், மாற்றுவதும் (வியாபார நோக்கிலும் கூட) சாத்தியமாகிறது.

விகிபீடியா (wikipedia) என்றழைக்கப்படும் தகவல் களஞ்சியப் பகுதியில் மட்டும் இது வரை 205 உலக மொழிகளில் மொத்தம் கிட்டத்தட்ட 20 லட்சம் தகவல்கள்/கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழிகளைப் பொருத்தவரையில் ஹிந்தி (1143), சமஸ்கிருதம் (1095), மராத்தி (1089), தமிழ் (724), கன்னடம் (703) ஆகியவற்றில் 500 க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. இவற்றைத் தவிர பெங்காலி, தெலுங்கு, காஷ்மீரி, குஜராத்தி, மலையாளம் ஆகியவற்றிலும் 100 க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் குட்டி, குட்டி நாடுகளின் மொழிகளில் கூட ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் இருப்பதுதான்.

இந்திய மொழிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு விகி பல முயற்சிகளை தொடங்கியுள்ளது. கணிப்பொறியில் இந்திய மொழி உள்ளீடுவதை எளிதாக்குவது, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அதற்கான விளக்கங்களை (documentation) உருவாக்குவது ஆகியவையும் இதில் அடக்கம் (பார்க்க: http://meta.wikimedia.org/wiki/Promoting_the_Indian_languages_projects). மேலும் விகிமீடியா பவுண்டேஷனைச் சேர்ந்த சிலர் மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பண உதவி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு மின்னஞ்சல் கூறுகிறது (பார்க்க: http://sourceforge.net/mailarchive/message.php?msg_id=12169345). எப்படி பண உதவி செய்வார்கள், எவ்வளவு என்பதெல்லாம் தெரியவில்லை.

இதைப் படிப்பவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்: நீங்கள் மாணவரோ, இல்லையோ, விகிக்கு உங்களுடைய பங்களிப்பை இன்றே ஆரம்பியுங்கள். விகியின் அமைப்பு, அதில் எப்படி தகவல்களை சேர்ப்பது/மாற்றுவது என்பதெல்லாம் புரிய சில நாட்களாகும். ஆனால் பழகிய பின் எளிதுதான் (ஏனென்றால், "சாப்பிடுவதும் வாய்ப் பழக்கம்" - எத்தனை நாளைக்குத் தான் "சித்திரமும் ..." என்று சொல்லிக் கொண்டிருப்பது).

வாருங்கள்! வருங்கால சந்ததியினர் உலகை தமிழிலேயே அறிய வழி செய்வோம்.

0 Comments:

Post a Comment

<< Home