29 June 2005

விகி (wiki) - ஒரு அறிமுகமும், ஒரு வேண்டுகோளும்

நிச்சயமாக நீங்கள் விகிபீடியா (wikipedia) பற்றி அறிந்திருப்பீர்கள். இது, உலக வலையில் (world wide web) பல்வேறு தனி நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் என்சைக்ளோபீடியா (தகவல் களஞ்சியம்) போன்றது. விகிமீடியா பவுண்டேஷன் (Wikimedia Foundation) எனப்படும் லாப நோக்கில்லாத சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்படும் இதில் பல மொழிகளில் தகவல் களஞ்சியம், அகராதிகள், செய்திகள் போன்ற பல பகுதிகள் உள்ளன. இவை அனைத்தும் சுருக்கமாக விகி (wiki) என்றழைக்கப்படுகின்றன.

விகியின் நோக்கம், பல மொழி மற்றும் பல விதமான களஞ்சியங்களின் உருவக்கம், வளர்ச்சி, பயன்பாடு ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதும், விகியின் எல்லா பகுதிகளையும் உலக மக்களுக்கு இலவசமாக வழங்குவதுமாகும். விகியில் உள்ள அனைத்து தகவல்களும் லினக்ஸின் ஆதாரமான ஜி.என்.யு சுதந்திர லைசன்சை (GNU Free Documentation License) அடிப்படையாகக் கொண்டள்ளன. இதனால், விகியின் எந்த தகவலையும், யார் வேண்டுமானலும், சுதந்திரமாக நகல் எடுப்பதும், பகிர்ந்துகொள்வதும், மாற்றுவதும் (வியாபார நோக்கிலும் கூட) சாத்தியமாகிறது.

விகிபீடியா (wikipedia) என்றழைக்கப்படும் தகவல் களஞ்சியப் பகுதியில் மட்டும் இது வரை 205 உலக மொழிகளில் மொத்தம் கிட்டத்தட்ட 20 லட்சம் தகவல்கள்/கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழிகளைப் பொருத்தவரையில் ஹிந்தி (1143), சமஸ்கிருதம் (1095), மராத்தி (1089), தமிழ் (724), கன்னடம் (703) ஆகியவற்றில் 500 க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. இவற்றைத் தவிர பெங்காலி, தெலுங்கு, காஷ்மீரி, குஜராத்தி, மலையாளம் ஆகியவற்றிலும் 100 க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் குட்டி, குட்டி நாடுகளின் மொழிகளில் கூட ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் இருப்பதுதான்.

இந்திய மொழிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு விகி பல முயற்சிகளை தொடங்கியுள்ளது. கணிப்பொறியில் இந்திய மொழி உள்ளீடுவதை எளிதாக்குவது, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அதற்கான விளக்கங்களை (documentation) உருவாக்குவது ஆகியவையும் இதில் அடக்கம் (பார்க்க: http://meta.wikimedia.org/wiki/Promoting_the_Indian_languages_projects). மேலும் விகிமீடியா பவுண்டேஷனைச் சேர்ந்த சிலர் மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பண உதவி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு மின்னஞ்சல் கூறுகிறது (பார்க்க: http://sourceforge.net/mailarchive/message.php?msg_id=12169345). எப்படி பண உதவி செய்வார்கள், எவ்வளவு என்பதெல்லாம் தெரியவில்லை.

இதைப் படிப்பவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்: நீங்கள் மாணவரோ, இல்லையோ, விகிக்கு உங்களுடைய பங்களிப்பை இன்றே ஆரம்பியுங்கள். விகியின் அமைப்பு, அதில் எப்படி தகவல்களை சேர்ப்பது/மாற்றுவது என்பதெல்லாம் புரிய சில நாட்களாகும். ஆனால் பழகிய பின் எளிதுதான் (ஏனென்றால், "சாப்பிடுவதும் வாய்ப் பழக்கம்" - எத்தனை நாளைக்குத் தான் "சித்திரமும் ..." என்று சொல்லிக் கொண்டிருப்பது).

வாருங்கள்! வருங்கால சந்ததியினர் உலகை தமிழிலேயே அறிய வழி செய்வோம்.

04 June 2005

இது இலவசங்களின் காலம்

லவச பஸ் பாஸ், இலவச மின்சாரம், இலவச சைக்கிள், இலவச மென்பொருள் - இந்த பட்டியல் இப்போதைக்கு முடிகிறார்போலில்லை.

தமிழக அரசும், மத்தியிலுள்ள தமிழக அமைச்சர்களும் நடத்தி வரும் இந்த இலவச விளையாட்டு 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலைக் குறிவைத்து ஆடப்படுகின்றன. தேர்தல் முடிவு பற்றி கவலைப்படும் அரசியல் கட்சிகள் இத்திட்டங்களின் பயனைப் பற்றியோ, செலவை பற்றியோ அல்லது இவையெல்லாம் நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா என்பபற்றியெல்லாம் சிந்திப்பதில்லை.

இந்த இலவச விளையாட்டின் தொடர்ச்சியாக வெகு சமீபத்தில் தமிழக அரசு மூன்று திட்டங்களை ஒரே நாளில் (ஜூன் 2) அறிவித்துள்ளது/துக்ிள்ளது.

லவச புத்தகங்களினால் அரசுக்கு ஏற்படும் செலவு 83 கோடி. பயன்பெறும்(!!) மாணவ, மாணவியர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர். இதில் ிக்கத்தக்க அம்சம், இப்படி அனைவருக்கும் இலவசமாகக் ொடுப்பது தேவைதானா? நிச்சயமாக இந்த ஒரு கோடி மாணவ, மாணவியரின் பெற்றோரும் புத்தகங்கள் வாங்க முடியாத அளவுக்கு ஏழைகளல்ல. அப்படி இருந்திருந்தால் சென்ற ஆண்டுகளில் அவர்கள் எப்படி புத்தகங்கள் வாங்கியிருப்பார்கள்? ஏற்கனவே பல்வேறு அரசு சாரா அமைப்புகளும் (ரசிகர் மன்றங்கள் உட்பட), தனிப்பட்டோரும் கடந்த ஆண்டுகளில் ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வந்திருக்கிறார்களே. வரும் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அரசு என்ன செய்யப் போகிறது?

இம்மாதிரியான கவர்ச்சித் திட்டங்களை விட்டு விட்டு, அரசாங்கம் கல்வியை மேம்படுத்துவதற்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம். எத்தனை அரசுப் பள்ளிகளில் நூலகமோ, நல்ல ஆய்வுக்கூடமோ இருக்கிறது? குடிநீர் வசதியும், கழிவறை வசதியும் இன்னும் பல பள்ளிகளில் பேச்சிற்குக்கூட இல்லை. உருப்படியான கரும்பலகையும், மேஜை நாற்காலிகளும் இல்லாததை எங்கே போய்ச் சொல்ல. "அடப் போப்பா, எத்தனையோ கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியரே இல்லை, அட இருந்தாலும் வருவதில்லை", என்று சொல்வது கேட்கிறது. ஆனால் என்ன செய்வது, இதையெல்லாம் செய்தால், 'ஜெயலலிதா இலவசமாக கொடுத்தது' என்று சொல்லி, தேர்தலில் ஓட்டுக் கேட்க முடியாதே.

ரண்டாவது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இலவசமாக (தெரிந்ததுதானே, ஏன் திரும்ப திரும்ப சொல்லவேண்டும்) 10,000 செல்போன்கள். இது ஜெயலலிதா செலுத்தும் செஞ்சோற்றுக்கடன். காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றிக்கு பதில் மரியாதை.

இத்திட்டத்தின் கீழ் போனும், கனெக்-ஷனும் இலவசமாக வழங்கபடுகின்றன. நல்ல வேளை, மாத பில் பணத்தை குழுக்களே கட்ட வேண்டுமாம். அது சரி, அந்த ஊரில் செல்போன் கட்டமைப்பே (mobile network) இல்லாவிட்டால் செல்போனை வைத்துக்கொண்டு என்ன செய்வது? வீட்டுக் குழந்தைகள் அதை வைத்து விளையாட வேண்டியதுதான். கிராமப்புற குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு ரூபாய் 4000 செலவில் அரசு செல்போன் கொடுக்கிறது. அப்படியே இல்லாவிட்டாலும் இலவசமாக வாங்கி 2000-3000 க்கு விற்றால், வாங்க ஆளில்லையா என்ன? தெனாலி ராமன், பூனை வளர்த்த கதைதான் நினைவுக்கு வருகிறது.

அதெல்லாம் சரி எந்த நிறுவனத்தின் போன் வழங்கப்படும் - நோக்கியா, சாம்சங், எல்ஜி...? எந்த சர்வீஸ் நிறுவனம் (service provider) தேர்வு செய்யப்படும் - பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ், ஏர்டெல்...? இந்த விவரங்களெல்லாம் இன்னும் தெரியவில்லை. ஊழல் செய்வதற்கு அருமையான வாய்ப்பு! விடுவார்களா அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்? எந்தப் பெட்டி பெரியதோ அதை வைத்து முடிவு செய்வார்கள் போலும்.

மூன்றாவது திட்டம் ('புரட்சித் தலைவியின் புதுமைத் திட்டம்: உதட்டுப் பிளவு சரி செய்யும் திட்டம்,' என்று அடுத்த தேர்தலில் விளம்பரம் செய்யலாம்), இந்தியாவிலேயே முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறதாம் (இதில் பெருமை வேறு). பிளவுபட்ட உதடு, மேல் அண்ணமுள்ள 4000 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை (plastic surgery) மூலம் இக்குறை சரி செய்யப்படுமாம். இத்திட்டத்தின் துவக்க விழா ஜூன் 2 அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது. ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ 25000 செலவு, கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்த செலவு ரூ 10 கோடி.



இதில் குழந்தைகளுக்கு பொம்மைகளும், பரிசுப்பொருட்களும் வேறு அம்மா பரிசளித்தார்களாம். இந்த வகையில் செலவு தனி. அறுவை சிகிச்சையிலும், மருந்து மாத்திரைகளிலும் தவறு நேர்ந்து குழந்தைகளுக்கு ஏதாவது ஆகாமலிருந்தால் சரி. அப்படியே ஆனால் கூட இழப்பீடு கொடுத்து ஓட்டு வாங்கலாம். இப்போது தான் முகத்தில் (உதட்டிலிருந்து) ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் கழுத்து, உடம்பு, இடுப்பு, கால் என்று எத்தனையோ இருக்கின்றன. தேர்தலுக்குள் அம்மா, தமிழ்நாட்டை நோய்களோ, உடற்குறைபாடுகளோ இல்லாத மாநிலமாக ஆக்கிவிடுவார்கள் என்று நம்பலாம்.

இன்னும் கூட அரசு மருத்துவமனைகளின் நிலை, நோயாளிகளின் நிலையை விட மோசமாக இருக்கிறது. மருந்துப் பற்றாக்குறை, மருத்துவர்கள் இல்லாமை (சொந்த கிளினிக்-ல இருக்காங்கப்பா), சுகாதாரக்கேடு (பல நோயாளிகளுக்கு, அரசு மருத்துவமனையில் தான் நோய் முற்றுகிறது) இதெல்லாம் சர்வ சாதாரணம். கிராமங்களின் நிலை
யையோ கேட்கவே வேண்டாம்.

அரிது அரிது ஆரம்ப சுகாதார மையம் திறந்திருப்பது அரிது,
திறந்திருந்தாலும் டாக்டர் இருப்பது அரிது,
டாக்டர் இருந்தாலும் மருந்து மாத்திரை இருப்பது அரிது...
என்று ஔவையார் பாணியில் பாட வேண்டியதுதான்.

எந்த அரசியல்வாதியாவது அரசு மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களுக்கெல்லாம் அங்கே போய்க் கஷ்டப்பட தலையெழுத்தா என்ன? வழக்கு வரும் போது, நெஞ்சு வலி வந்தால் அப்போலோவில் போய் படுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ரு அரசாங்கம் செய்ய வேண்டியது இது, செய்யக்கூடாதது இது, என்றெல்லாம் அரசியல் சட்டம் வரையறுக்கவில்லை. செய்ய வேண்டியதைச் செய்யாமல், மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்ற போர்வையில் மக்களை சோம்பேறிகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் இந்த அரசாங்கங்கள் மாற்றிக்கொண்டிருக்கின்றன. இப்படிக் கொடுத்தால் அரசாங்க கஜானா காலியாகிவிடுமே, என்ன செய்வது? அதைப் பற்றி நமக்கென்ன கவலை, உலக வங்கியிடம் கடன் வாங்கலாம். நம்முடைய சொந்தப் பணத்தையோ அல்லது கட்சிப் பணத்தையோவா கட்டப் போகிறோம்?

ம்மாவின் அடுத்த இலவச அறிவிப்பு எதுவாக இருக்கும்? உங்களுக்கு புதுமையாக ஏதேனும் திட்டம் தோன்றினால்

செல்வி ஜெயலலிதா,
இலவச (மன்னிக்கவும்) தமிழக முதல்வர்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.

என்ற முகவரிக்கு எழுதவும். சிறப்பான திட்டத்தை எழுதுவோருக்கு... அட அம்மா ஏதாவது இலவசமாக தருவாங்கப்பா.