26 July 2005

மீனாட்சியம்மன் கோயில் - சில மாற்றங்கள்

சென்ற ஞாயிறன்று (ஜூலை 24) மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன்.

இப்போதெல்லாம் தமிழகத்தில் பெரும்பாலான கோயில
கள் சுத்தமாக இருக்கின்றன. இதனை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகவே பார்த்து வருகிறேன். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். மீனாட்சி கோயிலும் விதிவிலக்கின்றி சுத்தமாகவே இருந்தது. இத்தனைக்கும் இப்போதெல்லாம் கோயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது (மெகா சீரியல்களையும் தாண்டி கூட்டம் வருகிறதென்றால், அது ஆச்சரியம் தான்). அதுவும் வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சியைப் பார்ப்பதற்கு 15 ரூபாய் கொடுத்து பார்க்கும் சிறப்பு வழிக்கு கூட ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் கூட தூண்கள் திருநீறு, குங்குமம் இல்லாமல் சுத்தமாகவே இருக்கின்றன. பக்தர்களும் பொறுப்போடு நடந்து கொள்கிறார்கள் போலும், நல்ல மாற்றம் தான்.

இன்னொரு மிகப் பெரிய ஆச்சரியமும் உண்டு. நீண்ட நாட்களாகவே என்னை உறுத்திக் கொண்டிருந்த விஷயம் என்று சொல்லலாம். சுவாமி சன்னிதிக்கு எதிரில் கொடிமரத்துக்கு தென்கிழக்கே கூரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஊர்த்வதாண்டவரையும், பத்ரகாளியையும் பார்த்திருப்பீர்கள். பக்தர்கள் எறியும் வெண்ணை சிலை முழுக்க வெள்ளை அம்மைத் தழும்புளாய். இது போதாதென்று சில வெண்ணை உருண்டைகள், குறி தவறி பின்னாலிருக்கும் தூண்களிலும், கூரையிலும் கூட ஒட்டிக் கொண்டிருக்கும்.

அதெல்லாம் இப்போது பழங்கதை ஆகிவிடும் போலிருக்கிறது. ஊர்த்வதாண்டவரும், பத்ரகாளியும் சுத்தமாகவும், கம்பீரமாகவும் தூணின் உண்மையான நிறத்தில் நின்று கொண்டிருந்தார்கள். உற்றுப் பார்த்தீர்களானால், அந்த முகங்களில் ஒரு புன்னகையைக் காண முடியும். மாற்றத்திற்கு சாட்சியாக, சுற்றியிருக்கும் கம்பியில் ஒரு அறிவிப்பு, "பக்தர்கள் வெண்ணையை பாதத்தில் பட்டும் சார்த்தவும்". கோயில் நிர்வாகத்துக்கு ஒரு சபாஷ்.

புதுசு கண்ணா புதுசு
வெள்ளியம்பல நடராஜர், சென்ற ஜூன் 10 நடந்த க
ம்பாபிஷேகத்திற்குப் பிறகு வெள்ளிக் கவசங்களுடன் ஜொலிக்கிறார். ஆனால், தகடுகள் முழுமையாகப் பொருந்தவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பாக இடது கையிலும், தலையிலும் இடைவெளியில் சிலையயே பார்க்க முடிகிறது. அதுவும் தகடுகளை நூல் கயிறு வைத்து கட்டியிருக்கிறார்கள். ஐயோ பாவம், நடராஜர் வெள்ளைக் கட்டுடன் பரிதாபமாகக் காட்சியளிக்கிறார். கோயில் நிர்வாகம் வேலை முடியும் முன்பே அவசரப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். ஆனால் கும்பாபிஷேகம் முடிந்து, ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஏன் சரிசெய்யவில்லை என்று தெரியவில்லை.

ஸ்கூட்டர் ஸ்டாண்டு
இறுதியாக ஒரு உறுத்தல். கோயிலின் சைக்கிள்/ஸ்கூட்டர் ஸ்டாண்டில் பகல் கொள்ளை நடக்கிறது. திண்டுக்கல் ரோட்டிலிருந்து
வரும் போது, கோயிலின் தென்மேற்கு மூலையில், என்டைஸுக்கு எதிரிலிருக்கும் ஸ்டாண்டில் நடந்தது. சைக்கிளுக்கு 1 ரூபாய், ஸ்கூட்டக்கு 2 ரூபாய் என்று சீட்டில் அச்சாகியிருக்கிறது. ஆனால், அங்கிருப்பவர் வசூலிப்பதோ முறையே 2 மற்றும் 3 ரூபாய். மக்களும் கூட இதைப் பற்றி கவலைப்படுவதாய் தெரியவில்லை. அவர் கேட்கும் தொகையைக் கொடுப்பார்கள் போலும்.

நான் கேட்டதற்கு இப்போது கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகச் சொன்னவர், அதை எழுதித் தர மறுத்து விட்டார். அங்கிருந்தவர் பெயர் ரவி. குத்தகை உரிமையாளர் பெயர் துரைப்பாண்டி என்று சீட்டில் போட்டிருக்கிறது (படத்தைப் பார்க்கவும்). கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

0 Comments:

Post a Comment

<< Home